''தற்கொலைதாரி ஜமீல் மொஹமட் தொடர்பில் தாஜ் ஹோட்டல் வழங்கிய தகவலை புறக்கணித்த புலனாய்வு பிரிவு" : அம்பலமான தகவல்



 ஜமீல் மொஹமட் என்ற தாக்குதல்தாரி  2019.04.20 ஆம் திகதியன்று  கொழும்பு தாஜ் ஹோட்டலுக்கு வந்து விருந்தினரை போன்று அந்த ஹோட்டலில் தங்குவதற்கு பதிவாகியுள்ளார். இவரது வருகை மற்றும் பதிவு தொடர்பில் அந்த ஹோட்டல் முகாமைத்துவம் அரச  புலனாய்வு துறைக்கு  மின்னஞ்சல் ஊடாக அறிவித்துள்ளது. எனினும் புலனாய்வு பிரிவினர் அதனை அலட்சியப்படுத்திவிட்டனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றில் நேற்று இதனைத் தெரிவித்த அவர்,

 ஜமீல் மொஹமட் என்ற தாக்குதல்தாரி  அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்து 2017 ஆம் ஆண்டு முதல் அரச புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வரும் பின்னணியில் தான் ஹோட்டல்  முகாமைத்துவம் இந்த தகவலை வழங்கியுள்ளது.

இருப்பினும் இந்த தகவலை அடிப்படையாக்க கொண்டு அரச புலனாய்வு துறை  முறையாக செயற்படவில்லை..இது குறித்தும் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறன.


இதேநேரம்  2018.11.30 ஆம் திகதியன்று வவுனத்தீவு பொலிஸ் பாதுகாப்பு அரனில் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில்  விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள்  போராளியான அஜந்தன் என்பரை குற்றவாளியாக்கும் வகையில் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டன.

விசாரணைகளை திசைத்திருப்புவதற்காக போலியான சாட்சியங்கள் உருவாக்கப்பட்டன. போலியான சாட்சியங்களை திரட்டிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்கள் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இதேநேரம் சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத்தாக்குதலால் உயிரிழந்த சாரா ஜெஸ்மினின் டி.என்.ஏ பரிசோதனைகள் ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் 3 ஆவது தடவையாக எடுத்த பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டி.என்.ஏ. பரிசோதனைகளிலும் பாரிய சந்தேகம் காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில்  நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளோம்.


சாரா உயிருடன் உள்ளாரா  அல்லது  இறந்து விட்டாரா என்பதில் பாரிய சந்தேகம்  காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பான விசாரணை அறிக்கைளை நீதிமன்றத்துக்கு  சமர்ப்பிப்போம்.


குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியாகவே பல விடயங்களை முழுமையாக அறிந்துக் கொண்டுள்ளார்.

தாக்குதல்கள் குறித்து பல விடயங்கள் இவருக்கு தெரிந்துள்ளது என்பதற்கு சாட்சியங்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அத்துடன் பிரபல்யமான சந்தேகமும் காணப்படுகிறது.இவ்விடயம் குறித்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன . 

விஜித் மலல்கொட விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கப்படும். 43 பரிந்துரைகளை செயற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.